அன்புள்ள ராம்,
சொல்லியிருக்கிறேனா? கொரோனா முதல் லாக்டவுனிற்கு முந்தைய நாளில், ரயில் நிலைய நடைமேடை கூரையில் காகம் ஒன்றைக் கண்டேன். அதன் கால்கள் ஏதோ கம்பியில் சிக்கியிருந்தன. யாராவது காப்பாற்றுங்கள் என்று நம்பிக்கையோடு கரைந்தது. யாராவது காப்பாற்றுவார்கள் என்று நானும் கண்டும் காணாமல் ரயிலேறி கடந்தேன். லாக்டவுன் முடிந்து சில மாதங்கள் கழித்து, ரயில் ஏற வந்த போது , அதே நடைமேடையில் நின்று அண்ணார்ந்து பார்த்தேன். உயிர் பிரிந்து, உடல் காய்ந்து கூரையில்தொங்கிக் கொண்டிருந்தது காகம். கம்பியில் சிக்கியிருந்தன அந்த கால்கள்.அந்த பறவையின் மரணத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று பல முறை வருந்தியிருக்கிறேன். பிறர் உரிமைகள் பறிக்கப்படும் போது,துயருற்று கதறும் போது எனக்கென்ன என்று கண்டும் காணாமல் கடந்து செல்லுதல் குற்றம் தானே? அறியாமல் நேர்ந்த பிழை என்று அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது போல் பிரபஞ்சத்திடம் மன்னிப்பு கோரவா? பிழை உணர்ந்து வருந்திய நொடியே மன்னிக்கப்பட்டு விட்டாய் என காதோரம் கிசுகிசுக்கும் உன்னில் பிரபஞ்சத்தின் சாயல்.ஏன் பதில் கடிதம் அனுப்பவில்லை என்று கோபித்துக் கொள்கிறேன்.நீயோ,எங்கிருக்கிறாய் என்று சொல், முகவரி தெரிந்தால் தானே கடிதம் அனுப்ப இயலும் என்கிறாய்.சொல்லட்டுமா? இல்லை, கதவுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறேன், முடிந்தால் கண்டுபிடி என்று குழந்தைகள் சொல்வது போல், நானும் உனக்கு ஒரு துப்பு கொடுக்கிறேன்.உன் முற்றத்தில் பூத்திருக்கும் சிகப்பு நிற செம்பருத்தியின் மகரந்த துகள்களில் மறைந்தபடி, கடல் போல் காதலுடன் உன் மடலுக்காக காத்திருக்கிறேன்.முடிந்தால் கண்டுபிடி.
இப்படிக்கு
உன்
18-01-2023
மாலை 5.56