ஆசையில் ஓர் கடிதம் – 4
அன்புள்ள ராம்
என் கடிதங்களுக்கு காத்திருக்கிறாய் என்று நம்புகிறேன்.
இருந்து இல்லாமல் போனவர்களுக்கு நீ கடிதம் எழுதிய துண்டா? நான் எழுதியிருக்கிறேன். இறந்தவர்களின் சாயலை இருப்பவர்களிடம் தேடித் தேடி தொலைந்ததுண்டா? நான் தொலைந்திருக்கிறேன்.
எனது பதினைந்து வயதில், புற்று நோய் காவு வாங்கிய அண்ணன் ஒருவனுக்கு நான் எழுதி தீர்த்த கடிதங்கள் பற்றி உன்னிடம் சொல்லியிருக்கிறேனா?
பின்னொரு நாளில், முகவரி தெரியாத இடத்திற்கு, அனுப்ப இயலாத கடிதங்களை எழுதுகிறாயே, பைத்தியமா நீ என்று மனம் ஏசியதால், அண்ணனுக்கு எழுதிய அக்கடிதங்களை எல்லாம் கிழித்தெறிந்த கதை பற்றி சொல்லியிருக்கிறேனா?அவன் போல் புன்னகை, அவன் போல் உயரம், அவன் அணிந்திருந்தாற் போல் கண்ணாடி என்று வருவோர் போவோரிடமெல்லாம் அவன் சாயலைத் தேடிய கதை பற்றி சொல்லியிருக்கிறேனா?
ஆம், மரணத்திற்கு பின்னர் நம் முகவரி என்ன?
முகவரியே தெரியாமல் உனக்கும் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
இருந்து இல்லாமல் போனவர்களின் சாயலை தேடுவது வலி நிறைந்த தேடல் தான். ஆனால் அதில் ஒரு நியாயம் உள்ளது.
உன் சாயலே தெரியாதே. உன்னை எப்படி தேட?
இருக்கிறாய் தானே? பிறந்திருக்கிறாய் தானே?
இப்படிக்கு
உன் ❤️
27 – 11 – 2022
