ஆசையில் ஓர் கடிதம்- 7
அன்புள்ள ராம்
உன்னிடம் சொல்லியிருக்கிறேனா? அப்போது பன்னிரெண்டு வயது இருக்கும். பள்ளியில் வைத்து கடுமையான வயிற்று வலி. அன்றைய வகுப்பு தேர்வுக்கு பயந்து நான் நடிப்பதாக சக மாணவிகள் சொல்லிக் கொண்டனர். ஆசிரியரிடம் வயிற்று வலி என்ற போது படுத்துக் கொள் என்றார். இல்லை தேர்வு முடித்து படுத்துக் கொள்கிறேன் என்றேன். ஏன் என்றார். நீங்கள் நன்று என்று என் பரீட்சைத் தாளில் எழுதுவீர்களே அதை நான் இழக்க விரும்பவில்லை என்றேன். புன்னகைத்து சம்மதித்தார். அன்றைய தேர்வில், எனக்கு மட்டும் மிக நன்று என்று எழுதியிருந்தார்.பத்தொன்பது வயதில் தலையில் பட்ட அடியால் கடுமையான தலைவலியால் அவதியுற்ற போது நெருங்கிய உறவொன்று நான் நடிப்பதாகச் சொன்னது. மயங்கி விழுந்த போது உற்ற உறவொன்று நான் நடிப்பதாக நம்பியது.வலியின் போது பரிகசிக்கப்படுதல் வலியை விடக் கொடிது தெரியுமா? அந்த வலியை பல முறை இந்த பெருவாழ்வு அடித்து அடித்து சொல்லிக் கொடுத்திருக்கிறது. எவர் வலியையும் பரிகசிக்காமல் உணர முயலும் பெரும்பக்குவம் உனக்கு எப்படி வாய்த்தது என்றொரு நாள் வினவினாயே. இப்படித் தான்.என்னை ஏமாளி என்பார்கள். பரவாயில்லை இருந்து விட்டுப் போகிறேன்.நீயேனும் புரிந்து கொள்ளேன்.
இப்படிக்கு
உன் ❤️
13.12.2022
காலை 10.30
