அன்புள்ள ராம்ஒரு கதை சொல்லவா?பெருங்கொன்றை மரம் ஒன்றில் மஞ்சள் நிறப் பறவை ஒன்றும் பச்சைக்கிளி ஒன்றும் வாழ்ந்து வந்ததாம். ஒரு கோடையில் மஞ்சளாய் பூத்து நின்றது கொன்றை. அந்த மலர்கள் தன் நிறத்தில் இருந்ததால், மரம் எனது என்றதாம் மஞ்சள் பறவை. ஏன் இலைகள் முழுதும் பச்சை தானே, என்று கேள்வி கேட்கும் கலையை பச்சைக்கிளி அறிந்திருக்கவில்லை. பின்னர் ஒவ்வொரு நாளும் மஞ்சள் பறவை பச்சை கிளியை வார்த்தைகளால்கொத்திக் கொண்டே இருந்ததாம். எதிர் கேள்வி கேட்க தெரியாதவர்களின் நிலையே இது தான் தெரியுமா. தன் கூட்டைக் கலைத்து, பழத்தை பிடுங்கி, தொடர்ந்து இம்சித்த இடத்தை, விட்டு வெளியேறுதலே நிம்மதி என்று தூரம் பறந்து வேறு மரத்தில் தஞ்சம் புகுந்ததாம் பச்சை கிளி.பின்னொரு நாளில் இரை தேடிப் போகையில் வழியில் கண்ட மஞ்சள் பறவை, நில் என்றதாம். நின்ற கிளியின் முன்னால் வந்து தன் சிறகு விரித்து, ஆரத்தழுவி நல்லாயிரு என்றதாம்.துரத்தி விட்டது நீதானே என்றுகோபத்தில் இருந்த பச்சை கிளி தழுவலில் கரைந்து போனதாம்.கோபங்களை வருத்தங்களை கரைக்கும் அருமருந்து ஆரத் தழுவல் தான் தெரியுமா?சொல்லியிருக்கிறேனா? ஒரு நாள் எனக்கும் அப்பாவுக்கும் வாக்குவாதம்.வார்த்தைகள் வாளாக மாறி தாக்குதல் தீவிரம் ஆனது. நான் வீட்டை விட்டே போகிறேன் என்று சட்டையை மாட்டிக் கொண்டார் அப்பா. ஐயோ அவரை நிறுத்து என்று பதறினாள் அம்மா. நானோ பேசாமல் போய் அவரை கட்டிப் பிடித்துக் கொண்டேன். மாட்டிய சட்டையை கழற்றி விட்டு, பாயை விரித்துப் படுத்து உறங்கிப் போனார் அப்பா.ஆம் , ஆரத்தழுவுதல் வலி நிவாரணம். மனதைக் குடையும் வலிகளை சுவடின்றி அழிக்கும் அழிப்பான்.எங்கிருக்கிறாய் நீ? உன்னை பற்றிய நினைவே வலியாக மாறி வருகிறது. நிவாரணமாக கடிதம் ஒன்று அனுப்பு. ஆர அமர யோசித்து எழுதும் நீண்ட கடிதம் கூட வேண்டாம். ஒரு வெற்று காகிதத்தை உன் தழுவல்களால் நிரப்பி அனுப்பு. காத்திருக்கிறேன்
இப்படிக்கு
உன்
02-01-2023
இரவு 8.30