ஆசையில் ஓர் கடிதம் – 9
அன்புள்ள ராம்,
இணையத்தில் கதை ஒன்று வாசித்தேன். நண்பர்கள் இருவர் பாலைவனத்தில் நடந்து சென்றார்களாம். நடந்து களைத்து பசியும் தாகமும் மேலிட, தூரத்தில் மதில் சுவர் ஒன்று தெரிந்ததாம். மதிலுக்கு அப்பால் சோலை இருப்பதும் தெரிந்ததாம். முதல் நண்பன் மதில் கடந்து சோலைக்குள் மறைந்தானாம். இரண்டாம் நண்பனோ, பசியோடும் தாகத்தோடும் நடப்பவர்கள்யாரையேனும் கண்டால் சோலைக்கான வழியைக் காண்பிக்கலாம் என்றெண்ணி,மீண்டும் வந்த வழியில் திரும்பி, பாலை நோக்கி நடந்தானாம். இந்த கதைக்கு கீழே முதல் நண்பன் சுயநலவாதி, இரண்டாம் நண்பன் பைத்தியக்காரன் என்று எழுதப்பட்டிருந்தது.நானோ சில நேரங்களில் சுயநலவாதியாகவும், சில நேரங்களில் பைத்தியக்காரியாகவும் இருக்கிறேன். என்னை புரிந்து கொள்ளுதல் சற்று கடினம் தான். ஆனால் உனக்கு புரியும் தானே?சொல்லியிருக்கிறேனா? எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் முந்நூற்று முப்பத்தி ஆறாவது மரம் ஒரு நாவல் மரம். பருவ காலத்தில், மரம் காய்த்து கிடக்கும் போது நாவல் பழங்கள் உதிர்ந்து சிதறி அடர் ஊதா வண்ணத்தை தரை முழுதும் தெளித்திருக்கும். சிலர் மரத்தில் இருக்கும் பழங்களை எக்கி பறிக்க முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்.ஒருத்தி மட்டும் மரத்திற்கு கீழே நின்று, வாயை பிளந்த படியே, ஏட்டி, வாயை மூடு, கிளையில் சில பறவைகளும் உள்ளன என்ற மனதின் எச்சரிக்கைகளை புறந்தள்ளி அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருப்பாள். கனி உதிர்ந்து வாயில் விழும் என்ற நம்பிக்கை அவளுக்கு. அவளைப் போலவே நானும் உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்.கனி விழுமோ? கவிதை மொழி வருமோ?
இப்படிக்கு
உன் ❤️
13 – 1 – 2023
காலை 10.42
